06 February, 2010 by admin
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதி கமார்ட், இலங்கை நிலவரம் குறித்த தனது அறிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபை உபகுழுவிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் சிறுவர்கள் படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் கருணாவுடன் சேர்ந்தியங்கும் இனிய பாரதி எனவும் அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை மறுத்துள்ளார் கருணா.
மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தாம் இனிய பாரதியிடம் பேசியபோது அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகக் கூறியுள்ளார் கருணா. மேலும் தாம் இப்போது ஆயுதப் போராட்டத்தை விடுத்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் சிறுவர்களைச் சேர்க்க வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் கூறியுள்ளார் அவர்.
அம்பாறை மாவட்டத்தின் இணைப்பாளராக உள்ள இனியபாரதி வருகின்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி சார்பில் அங்கு போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார் கருணா. இதேவேளை, கருணாவுடன் தாம் இதுகுறித்துப் பேசியபோது அவர் இனியபாரதியின் இவ்வாறான நடவடிக்கைகள் தமக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறியதாகவும் கமார்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.