ATHIRVU.COM
விரிவான செய்தி
  
வன்னியின் அழிவுகள் மனதை உலுக்கிவிட்டன - யாழ் ஆயர்

07 February, 2010 by admin

ஜனவரி 29 ஆம் திகதி அன்று படையினரின் அனுமதியுடன் வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார் யாழ்.ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம். அங்குள்ள மக்கள் மற்றும் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து அவர் மிகுந்த மனச்சுமையுடன் திரும்பியுள்ளார். அஙந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது. போரினால் உண்டாகியுள்ள அதீத அழிவுகளைப் புனரமைப்பதும், புனர்வாழ்வு பெறுவதும் அந்த மக்களுக்குத் தாங்க முடியாத பளுவைச் சுமத்தியுள்ளது எனக் கூறியுள்ளார் ஆயர்.

வன்னியின் முக்கிய பகுதிகளான கிளிநொச்சி, மாங்குளம், ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்த அவர் அங்கு மீளக்குடியமர்ந்த மக்களுடன் நேரில் பேசி அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தார். தாம் சென்ற பகுதிகளில், மிகக் குறிப்பாக மாத்தளன் பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகள், கொடூரங்கள், காணப்படும் எச்சங்கள் தமது மனதை உலுக்கியதாக அவர் பெரும் கவலையுடன் தெரிவித்தார். எல்லாத்திசையிலும் உள்ள பேரழிவுகளை சகஜ நிலைக்குக் கொண்டுவர புனர்வாழ்வும், புனர் நிர்மாணமும் மிகப் பாரிய அளவில் தேவைப்படும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை மக்கள் தமது ஆயுள்கால சேமிப்புக்களை இழந்துவிட்டார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மீள அமைப்பது பெரும் சுமையாக இருக்கப்போகிறது.கிராமங்கள் புதர் மண்டிக்காணப்படுகின்றன. வயல்கள் வனங்களாக மாறிவிட்டன. தேவாலயங்கள் அழிந்து, கடவுளர் திருவுருவங்கள் சேதமாகியுள்ளன. நெல்வயல்களில் முள் பற்றைகள் மேலோங்கி வளர்ந்துள்ளன. கால்நடைகளை காண்பது அரிதாக உள்ளது. வீடுகள் சின்னாபின்னமாகி விட்டன. எரிந்துள்ள பஸ்கள், வான்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வீதிகளை மூடி குவிந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் மீள்வாழ்வை தொடங்குவது சாத்தியமாகுமா என்றுகூட தனது மனத்தில் கேள்வி முளைத்துள்ளதாக அங்குள்ள நிலமையை வார்த்தைகளில் விவரித்துள்ளார்.


Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 2317







விளம்பரங்கள்






© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback