08 February, 2010 by admin
இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் விமான நிலையத்தினூடாக பெற்றுக் கொள்ளப்படுவதுடன் தகவல்களை பெறுவதற்காக பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும் குறித்த இலக்கின்றி தமது பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். இதனால் அவர்கள் உழைக்கும் பணத்தை சிறப்பான முறையில் எப்படி முகாமைத்துவம் செய்யலாம், எந்தத்துறைகளில் அதனை முதலீடு செய்வதன் மூலம் அதனை பல மடங்கு பெருக்கலாம் போன்ற ஆலோசனைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பெற்றுக்கொடுக்கவுள்ளதாம்.
இலங்கைக்கு திரும்பி வந்துள்ளவர்களில் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் இருப்பின், அவர்கள் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்பது குறித்த அறிவுரைகளும் வழங்கப்படவுள்ளன. எனவே வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு இந்த ஆய்வு பேருதவியாக இருக்குமென தாம் எதிர்பார்ப்பதாகவும் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.