கொன்று புதைக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவரின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் சீயோன்நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்லப்பன். இவர் அயன்கோடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் லிபின் ராஜா (23). இவர் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 4ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து செல்லப்பன் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் லிபின் ராஜாவின் செல்போனை கொண்டு அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு ஒரு சிலருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் பழவூர் நான்குவழிச்சாலை அருகே ஒரு ஓடையில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட இடத்தில் ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன் முன்னிலையில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பிரசன்னா தலைமையில் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.