தனது மூன்று பிள்ளைகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தை தற்கொலை

இந்த செய்தியை ஷியார் செய்ய

தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.

இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்ய முயன்றதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர். பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை குழந்தைகளை அடித்து கொலை செய்ய  திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.

சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


இந்த செய்தியை ஷியார் செய்ய