ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை எவ்வளவு ஆபத்தானது ? என்று உங்களுக்கு தெரியுமா ?

இந்த செய்தியை ஷியார் செய்ய

யுக்ரேன் போரில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை தங்களது படைகள் ஏவியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இது ஓர் ஆயுதக் கிடங்கைத் தாக்கி அழித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்தது. உக்கிரைனை இலகுவாக பிடிக்க முடியும். அங்கே கன ரக ஆயுதங்களை பாவிக்க தேவை இல்லை என்ற தப்புக் கணக்கை போட்ட ரஷ்யா. இறுதியாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு தாக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளது. அது ஒரு புறம் இருக்கட்டும்… கின்ஸல் எனப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை யுக்ரேனியப் போரில் முதல்முதலாக ரஷ்யா பயன்படுத்தியதாகக் கருத முடியும். இவ்வகை ஏவுகணை பெரும்பாலும் மிக் – 31 போர் விமானத்தில் இருந்து ஏவப்படும்.

கடந்த காலங்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் முதலீடு செய்வது பற்றி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பல முறை வலியுறுத்தியிருந்தார். தங்களது படை அணிவகுப்புகளிலும் இவ்வகை ஏவுகணைகளை இடம்பெறச் செய்திருந்தார்.ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிப்பதில் ரஷ்யா உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் கடந்த டிசம்பரில் கூறியிருந்தார். தற்போது யுக்ரேனின் டேலியட்டின் என்ற பகுதியில் உள் ஒரு ஆயுதக் கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்திருப்பதாக ரஷ்யா கூறியிருக்கிறது. இது தொடர்பான காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் என்றால் ஒலியைவிட குறைந்தது 5 மடங்கு வேகத்தில் செல்ல வேண்டும். அந்த அடிப்படையில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்தது ஒலியைவிட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன்கொண்டவை.

அவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் போல நெடுந்தொலைவு செல்லக்கூடியவை அல்ல. ஆனால், அவை பறந்து கொண்டிருக்கும்போது கண்டறிவது மிகவும் கடினம். சிலவகை ஏவுகணைகள் ராடாரில் இருந்து தப்பிவிடும். அதானால் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் பயனற்றதாக ஆகிவிடும். ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, கின்ஸல் ஏவுகணை 2,000km (1,240 மைல்கள்) தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இதனால் மணிக்கு 12,350 கி.மீ. வேகத்தில் பறக்க முடியும். கின்ஸல் ஏவுகணை அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு மிக அருகில் இருக்கும் ரஷ்யாவின் பகுதியான கலினின்கிராடுக்கு மிக்-31 விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.

கடந்த டிசம்பரில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சீனா பரிசோதிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனா சீனா அதை மறுத்தது. ஆயினும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தயாரிப்பில் சீன ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஹைப்பர்சோனிக் க்ளைட் ஏவுகணைகள். இவை பூமியின் வளிமண்டலத்துக்குள் இயங்கும். மற்றொன்று FOBS எனப்படும் பூமியின் தாழ்நிலை சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு. இவை இலக்கை நோக்கி விரையும்வரை பூமியின் தாழ்நிலை சுற்றுப்பாதையில் பறக்கின்றன.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒரு கேம்-சேஞ்சராக இல்லாவிட்டாலும், எட்டாத சில இலக்குகளை தாக்குதல் அபாயத்துக்கு உள்பட்டவையாக மாற்றிவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பது கடினம்.


இந்த செய்தியை ஷியார் செய்ய