ரஷ்யா ராணுவப் படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடுமையான வர்த்தகம், பொருளாதார, நிதியியல் தடைகளை விதித்து ரஷ்யா-வை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக மேற்கத்திய நாடுகள், ரஷ்ய நிறுவனங்களில் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்துவிட்ட ரஷ்யாவையும், ரஷ்ய நிறுவனங்களையும் முழுமையாகத் தனித்துவிட முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் BP நிறுவனத்தின் சார்பாக இருக்கும் BP CEO, பெர்னார்ட் லூனி மற்றும் முன்னாள் BP நிர்வாகி பாப் டட்லி ஆகியோர் உடனடியாக வெளியேற உள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது ஏற்கனவே பல கடுமையான தடைகளை விதித்து வரும் நிலையில், BP நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாயிலாக மட்டும் சுமார் 25 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் BP, ரஷ்யாவில் முதலீடு செய்திருக்கும் இதர 3 நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதால், ரஷ்யாவுக்கு 1.4 பில்லியன் டாலர் கூடுதல் பாதிப்பு. BP நிறுவனத்தின் மூலம் ரஷ்யா ரோஸ்நெட் பிரிட்டன் நாட்டு உடனான வர்த்தகத்தையும் இழக்க உள்ளது. பிரிட்டன் அரசு கடந்த வாரம் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், ரஷ்ய வங்கியான VTB மற்றும் ஆயுத உற்பத்தியாளர் Rostec இன் சொத்துக்களை முடக்கும், புட்டினுக்கு நெருக்கமான அவரது முன்னாள் மருமகன் கிரில் ஷமலோவ் உட்பட ஐந்து பேர் மீது தடை விதித்துள்ளது.
இதேபோல் பிரிட்டிஷ் வான்வெளியில் Aeroflot-ஐ தடை, லண்டனில் ரஷ்ய அரசு மற்றும் நிறுவனங்கள் பணம் திரட்டுவதற்குத் தடை, இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட “இரட்டை-பயன்பாட்டு” உபகரணங்களை ஏற்றுமதி செய்யத் தடை செய்ய உள்ளதாகப் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ள ரஷ்யர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது பிரிட்டன், ரஷ்யா மீது விதிக்கும் கடுமையான தடையாக இருக்கும் எனத் தெரிவித்தார் போரிஸ்.