ஹெல்மெட் போடல… சிக்னல மதிக்கல… ஃபோன் வேற… நெல்லை புள்ளிங்கோ சிக்குவாரா?

இந்த செய்தியை ஷியார் செய்ய

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 40,000 சாலை விபத்துகள் மேல் பதிவாகிறது. கடைசியாக அரசு வெளியிட்ட புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் 45489 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1001 விபத்துகள் அரங்கேறியுள்ளது. சாலை விதிகளை சரிவர கடைபிடிக்காமலயே பெரும்பாலான விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதி வேகத்தில் செல்வது, செல்போன் பேசியபடி வண்டி ஓட்டுவது, மதுபோதையில் வண்டி ஓட்டுவது ஆகிய காரணங்களால் தான் அதிக விபத்துகள் நடக்கின்றன.

இதை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்கூட வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிப்பதில் அலட்சியமாகவே உள்ளனர். இதுபோன்ற சூழலில் நெல்லையில் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் செல்வதுடன் ஒரு கையில் செல்போன் பேசியபடி நகரின் முக்கிய சாலையில் சுமார் ஒரு கி.மீ தூரம் பைக் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. பாளையங்கோட்டை ஊசி கோபுரத்தில் இருந்து செல்போன் பேச தொடங்கிய அந்த நபர் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மேம்பாலம் வழியாக கொக்கிரக்குளம் வரை போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் ஓற்றை கையுடன் வாகனம் ஓட்டி செல்கிறார்.

குறிப்பாக வண்ணாரப்பேட்டை மேம்பாலம் கீழ்ப்பகுதியில் இரண்டு கையுடன் வண்டி ஓட்டினாலே சாலையைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல; அந்த அளவுக்கு அப்பகுதியில் நாள் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படும். அந்த இடத்தில் கூட அந்த வாலிபர் ஒற்றை கையில் கியரை கூட கூட்டிக் குறைக்காமல் ஒரே வேகத்தில் வளைந்து நெளிந்து பைக் ஓட்டிச் செல்கிறார். இதற்கு ஒரு படி மேலாக கொக்கிரகுளம் சிக்னலில் ரெட் சிக்னல் விழுந்திருந்ததால் சக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து வரிசை கட்டி நின்றனர்.

ஆனால், இந்த வாலிபர் மட்டும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் குட்பாய் சொல்லிக் கொண்டு சிக்னலை மதிக்காமல் மின்னல் வேகத்தில் சாலையை கடந்து சென்றார். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய காரணத்தால் மட்டும் நாடு முழுவதும் 10522 விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் 4945 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாலை விபத்துகளை குறைக்கவும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும் அரசு என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இளைஞர்களின் இதுபோன்ற அஜாக்கிரதையால் அதிகாரிகள் தங்கள் இலக்கை எட்ட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.


இந்த செய்தியை ஷியார் செய்ய