தாலி கட்டிவிட்டு காதலன் எஸ்கேப்… கடலூரில் பரிதவிக்கும் இளம்பெண்… சோகமான பின்னணி

இந்த செய்தியை ஷியார் செய்ய

கடலூரில் தாலி கட்டிவிட்டு தலைமறைவான காதல் கணவனை தேடி இளம்பெண் பரிதவிக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிய காதல் கணவனை சேர்த்து வைக்கக்கோரி காதல் மனைவி போராட்டம். கணவன் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு. தலைமறைவான காதல் கணவன் போலீசார் வலைவீசி தேடல்.

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவருக்கும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த கஜலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வரும்போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த விஷயம் இரு குடும்பத்திற்கும் தெரிய வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் சென்றது.

அதன் அடிப்படையில் இரண்டு குடும்பங்களை அழைத்து விசாரணை செய்த போலீசார் காதலர்கள் இரண்டு பேருமே அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்வதற்கு தகுதியானவர்கள் என்பதால் காவல் நிலையத்திலேயே கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பரதூரிலுள்ள கணவன் மாதவன் வீட்டிற்கு வந்த கஜலட்சுமியை மாதவன் குடும்பத்தினர் அவர்களது குடும்பத்தில் சில தினங்களில் திருமணம் ஒன்று நடைபெற உள்ளதால் திருமணம் முடிந்த பிறகு கஜலட்சுமியை வீட்டிற்கு அழைத்து கொள்வதாக தெரிவித்தனர். இதன் பேரில் கஜலட்சுமி தனது ஊருக்குச் மாதவன் கட்டிய தாலியை மட்டும் சுமந்து கொண்டு சென்றார். இந்நிலையில் மாதவன் வீட்டில் அவர்கள் குறிப்பிட்டபடி ஒருவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தனது கணவன் தன்னை இன்னும் அழைக்காமல் இருப்பதைக்கண்டு கஜலட்சுமி அதிர்ச்சியுற்றார்.

இதனால் வேதனையுற்ற கஜலட்சுமி பலமுறை கணவன் மாதவனை தொடர்பு கொண்டபோது பேச முடியவில்லை. தன்னை சேர்த்து வைத்த போலீசாரிடமும் சென்று தெரிவித்தபோது போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் மாதவனையும் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனையடுத்து என்ன நடந்தாலும் பரவாயில்லை என பரதூரிலுள்ள கணவன் மாதவன் வீட்டிற்கு வந்த கஜலட்சுமி தன்னை சேர்த்துக்கொள்ளக்கோரி அவரது வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர் அமர்ந்திருந்த போதும் கணவன் மாதவன் வீட்டில் யாரும் இல்லாமல் அவர்கள் வீடு பூட்டியிருந்தது. இதனையடுத்து தகவலின்பேரில் வந்த போலீசார் கஜலட்சுமியிடம் விசாரணை செய்து காணாமல் போன கணவன் மாதவனை கண்டுபிடித்து சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து அவரை அழைத்துச் சென்றனர். ஆனாலும் உறுதியளித்தபடி காவல்துறையினரால் கூட தலைமறைவான கஜலட்சுமியின் காதல் கணவன் மாதவனை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய