“கறுப்பு ஆடுகள்!” பதுங்கிய ரஷ்ய ஆதரவாளர்கள்.. கச்சிதமாக தட்டி தூக்கிய உக்ரைன் படைகள்.. பரபர தகவல்

இந்த செய்தியை ஷியார் செய்ய

கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாகத் தொடங்கி உள்ள நிலையில், உக்ரைன் நாட்டிலேயே சிலர் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின், இடையில் சற்று ஓய்ந்து இருந்த போர் இப்போது மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும் கூட வெளியேறி உள்ளனர்.

இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் ரஷ்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதேநேரம் உக்ரைன் மக்களிலேயே சிலர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அவர்களில் சிலர் ரஷ்யா ராணுவத்திற்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் உக்ரைன் பாதுகாப்புப் படை இப்போது தீவிரமாக இறங்கி உள்ளது. பிரத்தியேக பாதுகாப்புப் படை அதிகாரிகள் முக்கிய இடங்களில் ரெய்டு நடத்தி, ரஷ்ய ஆதரவாளர்கள் கைது செய்து வருகின்றனர்,

அப்படி தான் விக்டர் என்பவரின் வீட்டில் முகமூடி அணிந்த உக்ரைன் பாதுகாப்புப் படை வீரர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பிற்குள் புகுந்தனர். அவர்களைக் கண்டதும் விக்டர் சற்றே பதற்றம் அடைந்தார். நாஜி படைகள் உடன் போராடும் ரஷ்ய அதிபர் புதினை பாராட்டுகிறேன் என்று பதிவிட்டவர் தான் இந்த விக்டர். இது போன்ற ரஷ்ய ஆதரவு பதிவுக்காகவே விக்டர் இப்போது கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விக்டர் கூறுகையில், “ஆம், நான் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரித்தேன். அது உன்மை தான். ஆனால், என்னை மன்னிக்கவும். நான் ஏற்கனவே என் மனதை மாற்றிவிட்டேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும் உக்ரைன் பாதுகாப்புப் படைகள் அவரை கைது செய்தது. ரஷ்யா படையெடுப்பிற்கு பின்னர், இயற்றப்பட்ட ஒத்துழைப்பு எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்கிவ் பகுதியில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 400 பேர் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற முடியும்.

இந்த போரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தான் பெரியளவில் ஆதரவு உள்ளது. அதேநேரம் உக்ரைன் மக்கள் அனைவரும் ஜெலன்ஸ்கியை ஆதரவித்துவிட்டனர் என்று கூற முடியாது. டான்பாஸ் பகுதியில் இருக்கும் பெரும்பாலான ரஷ்ய மொழி பேசும் உக்ரைன் மக்கள் இதில் ரஷ்யாவையே ஆதரிக்கின்றனர். ஏனென்றால், இப்பகுதியில் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் மற்றும் உக்ரைன் படைகள் இடையே கடந்த 8 ஆண்டுகளாக மோதல் இருக்கிறது. இதனால் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் ராணுவச் சட்டத்தின் கீழ், 11 ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் 25 எம்பிகளை கொண்ட உக்ரைன் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியும் அடக்கம். அதேபோல புதி்ன் உடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட விக்டர் மெட்வெட்சுக் என்பவரையும் உக்ரைன் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். உக்ரைன் ராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் எதற்காகக் கைது செய்யப்படுகிறார் என்ற தகவலைத் தெரிவிக்கத் தேவையில்லை. மேலும், 30 நாட்களுக்கு எவ்வித காரணமும் இன்றி கைது செய்து வைக்கலாம்.

உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில் டான்பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் ரஷ்ய மொழி பேசுபவர்கள் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து இருந்தனர். உக்ரைன் நாட்டில் படையெடுத்த ரஷ்யா ராணுவத்திற்கு உதவிகளைக் கூடச் செய்தனர். இருப்பினும், ரஷ்யா ராணுவத்தின் கொடூரத்தை உணர்ந்த உடனேயே, பலரும் புதினை ஆதரிப்பதை நிறுத்திவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

 

 


இந்த செய்தியை ஷியார் செய்ய