இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது ஒருமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலம் இலங்கைக்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் உதவ முன்வரலாம் என அறிவித்திருந்தது தமிழ்நாடு அரசு.
அதன்படி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இலங்கை மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி அதற்கான காசோலையையும் கொடுத்தார்.
தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த #இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, நம் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற கூற்றை மெய்ப்பித்துள்ளீர்கள் என #தமிழக_முதல்வர் #ஸ்டாலினை விளித்து சற்றுமுன் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினேன். @mkstalin @CMOTamilnadu pic.twitter.com/dcpecad0GS
— Mano Ganesan (@ManoGanesan) May 4, 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்னெடுப்புக்கு இந்தியாவை தாண்டி பல நாட்டு மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் பாராட்டப்பட்டதோடு, பெருமளவில் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு எம்.பி., மனோ கணேசன், “தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவ தீர்மாணித்து தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்ற கூற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளார்” எனக் கூறி புகழாரம் சூட்டியிருக்கிறார்.