மோடி டென்மார்க்கில் இருக்கும்போதே.. “இந்தியாவில் இன அழிப்பு” என செய்தி ஒளிபரப்பிய முன்னணி சேனல்!

இந்த செய்தியை ஷியார் செய்ய

மரியன்போர்க் (டென்மார்க்) : பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, டென்மார்க் நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

பிரதமர் மோடி டென்மார்க்கில் இருந்தபோதே, இந்தியாவில் மோடி அரசின் இன அழிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் போராட்டங்கள் குறித்த செய்தி அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

டென்மார்க்கில் நடைபெற்ற இரண்டாவது, இந்தியா – நார்டிக் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டென்மார்க் வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

பிரதமர் மோடிக்கு டென்மார்க் வாழ் இந்தியர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி இசை கருவிகளை வாசித்து வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை ரசித்த பிரதமர் மோடி, அவர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியர்கள் உலகில் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அங்கெல்லாம் அந்த மண்ணுக்காக, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்றனர். கலாச்சார பன்முகத்தன்மை இந்தியர்களின் சக்தியாக விளங்குகிறது. நமது மொழி எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்திய கலாச்சாரத்தை கொண்டிருக்கிறோம்” என்றார்.

 

மரியன்போர்க் நகரில் டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்செனும், இந்திய பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் தலைமையில் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டென்மார்க் பிரதமருடனான சந்திப்பிற்குப் பின் பேசிய பிரதமர் மோடி, “உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. இந்தப் பிரச்னையால், கடுமையான பாதிப்புகளையே சந்திக்க நேரிடும். அதனால்தான், அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது. போர் துவங்குவதற்கு முன்பாகவே, பேச்சு மூலம் தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தினோம்.” என்றார்.

 

இந்திய பிரதமர் மோடி டென்மார்க்கில் இருக்கும்போதே, இந்தியாவில் சிறுபான்மை மதத்தினர் தாக்கப்படுவது, கொல்லப்படுவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் குறித்த செய்தித்தொகுப்பு டென்மார்க்கின் முக்கிய ஊடகத்தில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நடந்த முஸ்லீம் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் அட்டூழியங்களை சர்வதேச சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்தித் தொகுப்பில் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் டென்மார்க் பயணம் பெரும் வெற்றி அடைந்துள்ளதாக பா.ஜ.கவினர் கூறி வரும் நிலையில், மோடி டென்மார்க்கில் இருக்கும்போதே மோடி அரசின் இனப் படுகொலை குறித்த செய்திகள் அந்நாட்டு ஊடகத்தில் ஒளிபரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய