அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதல் குடியேற்றவாசிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் டொனால்ட் ட்ரம்ப், 2026-ம் ஆண்டில் தனது அதிரடி நடவடிக்கைகளை இன்னும் பலமடங்கு தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். இது வெறும் நாடுகடத்தல் மட்டுமல்ல, அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கே “ஆப்பு” வைக்கும் ஒரு அதிரடித் திட்டம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1. குடியுரிமை பறிப்பு: 10 மடங்கு வேகம்!
2026-ம் ஆண்டில் ட்ரம்ப் அரசின் மிக முக்கியமான இலக்கு ‘இயல்பாக்கம் செய்யப்பட்ட’ (Naturalized) அமெரிக்கக் குடிமக்களின் குடியுரிமையைப் பறிப்பதாகும்.
-
இதுவரை ஆண்டுக்குச் சராசரியாக 120 பேரின் குடியுரிமை மட்டுமே பறிக்கப்பட்ட நிலையில், இனி மாதத்திற்கு 100 முதல் 200 பேரின் குடியுரிமையைப் பறிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
அதாவது, பல ஆண்டுகளுக்கு முன் சட்டப்பூர்வமாக அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களும் இப்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இது அங்குள்ள லட்சக்கணக்கான இந்திய-அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2. 10 லட்சம் பேருக்கு நாடுகடத்தல் – 170 பில்லியன் டாலர் பட்ஜெட்!
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை நாட்டை விட்டு வெளியேற்ற ட்ரம்ப் அரசு களம் இறங்கியுள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 170 பில்லியன் டாலர் (சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்) கூடுதல் நிதியை ஒதுக்கி ‘ஒன் பிக் பியூட்டிபுல் பில்’ (One Big Beautiful Bill) என்ற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
3. ராணுவத்தை ஏவும் ‘கமாண்டர்’ ட்ரம்ப்!
வெறும் போலீஸ் அதிகாரிகளை மட்டும் நம்பியிருக்காமல், தேசிய பாதுகாப்புப் படை (National Guard) மற்றும் கடற்படை (Marines) வீரர்களை நகர்ப்புறங்களில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களில் ராணுவ வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
4. குடும்பங்கள் பிரியும் அபாயம் – சட்டப்பூர்வ வந்தவர்களுக்கும் சிக்கல்!
ஜனவரி 14, 2026 முதல் ‘குடும்ப மறு இணைப்பு’ (Family Reunification) திட்டத்தை ரத்து செய்யப்போவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, இன்னும் நிரந்தர அந்தஸ்து பெறாத ஆயிரக்கணக்கானோர் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
வெடிக்கும் எதிர்ப்புகள்!
ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு கலிபோர்னியா, இல்லினாய்ஸ் போன்ற ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
-
“இது சட்ட அமலாக்கம் அல்ல, அப்பாவி மக்களை அச்சுறுத்தும் செயல்” என மனித உரிமை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
-
மேலும், இவ்வளவு பெரிய அளவில் மக்களை வெளியேற்றினால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, பெரும் விலைவாசி உயர்வு (Inflation) ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.