மனைவியின் கண் முன்னே கணவன் ஆணவக் கொலை

இந்த செய்தியை ஷியார் செய்ய

மனைவியின் கண் முன்னே கணவனை ஆணவக் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சையத் ஆஸ்ரின் சுல்தானா. இருவரும் கல்லூரியில் படித்து வந்தபோது காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் வேறு வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி ஆரிய ஜமாஜத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாகராஜ், சையத் ஆஸ்ரின் சுல்தானா இருவரும் நேற்று இரவு கருமான் காட் பகுதியில் இருந்து சரூர் நகருக்கு பைக்கில் சென்று கொண்ருந்திருக்கிறார்கள் . அப்போது சரூர்நகர் நகராட்சி அலுவலகம் எதிரே இவர்கள் வந்த வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

பின்னர் நாகராஜை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சையத் ஆஸ்ரின் சுல்தானா சாலையில் சென்றோரை சத்தம்போட்டு கதறி அழுது அழைத்திருக்கிறார். ஆனால் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை . இதன் பின்னர் தன் கணவர் நாகராஜ் மீது படுத்துக் கொண்டு அவர் மீது அடி விழாதவாறு காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் நாகராஜ் மீது கடுமையான அடிகள் விழுந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

தகவலறிந்து வந்த சரூர் நகர போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் நாகராஜ் சுல்தானா திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் திருமணம் நடந்து உள்ளதால் இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய