கண்ணிவெடியில் கால்களை இழந்த உக்ரைன் பெண்! கரம்பிடித்த காதலர்! உருக வைக்கும் உன்னத காதல் கதை

இந்த செய்தியை ஷியார் செய்ய

கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடரும் நிலையில் உக்ரைனில் கண்ணிவெடியில் இருகால்களையும் இழந்த பெண்ணை, அவரது காதலர் மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்து கொண்டு மார்போடு அணைத்து ‛வெட்டிங் டான்ஸ்’ ஆடினார். உக்ரைன் போருக்கு மத்தியில் நெஞ்சை உருக வைக்கும் உன்னத காதல் உலகுக்கு தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24 முதல் போர் தொடுத்து வருகிறது. 2 மாதங்களை தாண்டியும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் உக்ரைன் மக்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

உக்ரைன் அப்பாவி மக்கள் பலியாகி வரும் நிலையில், ரஷ்ய படை வீரர்களும் கொல்லப்படுகின்றனர். இதனால் தொடர்ந்து உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைனில் கண்ணிவெடியில் கால்களை இழந்த பெண்ணை காதலன் கரம்பிடித்த விபரம் வருமாறு:

உக்ரைன் நாட்டின் லூகான்ஸ்க் மாகாணம் லிசிசான்ஸ்க் பகுதியை சேர்ந்தவர் ஒக்சானா (வயது 23). நர்ஸ். இவரும் விக்டர் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மார்ச் 27ல் காதலன் விக்டருடன் சொந்த ஊரில் ஒக்சானா நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரஷ்ய ராணுவத்தின் கண்ணிவெடியில் ஒக்சானா மிதித்தார்.

இதையடுத்து அந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. இதில் 2 கால்களையும் ஒக்சானா இழந்தார். இடது கையில் 4 விரல்களையும் பறிகொடுத்தார். இந்த வெடிவிபத்தில் அதிர்ஷ்வசமாக விக்டர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். கண்முன் காதலிக்கு நேர்ந்த சோகத்தை கண்டு விக்டர் கதறி அழுதார். மேலும் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு 4 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஒக்சானா உயிர் பிழைத்தார்.

மேலும் அவருக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக லிவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒக்சானாவும் விக்டரும் 6 ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் பற்றி யோசிக்காமல், மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வந்தனர். இந்த நிலையில் தான் கண்ணிவெடி வெடித்து ஒக்சானா 2 கால்களையும் இழந்துள்ளார். இதனால் அவர் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார். கால்களை இழந்ததை நினைத்து அழுது வருகிறார்.

இந்த சம்பவம் விக்டரின் மனதை மாற்றியது. அவர் ஒக்சானாவை திருமணம் செய்து கொண்டு காலம் முழுவதும் அவருக்கு துணையாக இருக்க விருப்பம் தெரிவித்தார். இதற்கு ஒக்சானாவும் செவிசாய்த்தார். இதையடுத்து அவர்களின் திருமணம் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் நடந்தது.

அழகான வெள்ளை உடையில் ஒக்சானா மணப்பெண்ணாக தோன்றினார். மோதிரம் மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருத்துவமனையில் இருந்தவர்கள் வாங்கி வந்திருந்த திருமண கேக்கை இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி அன்பை வெளிப்படுத்தினர். அதன்பிறகு விக்டர்-ஒக்சானா ஆகியோர் “வெட்டிங் டான்ஸ்” ஆடினர். கால்களை இழந்த ஒக்சானாவை கரங்களில் ஏந்தி மார்போடு அணைத்து விக்டர் நடனமாடினார்.

இது அங்கிருந்த டாக்டர், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் விக்டர்-ஒக்சானா வெட்டிங் டான்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. நெஞ்சை உருக்கும் வகையிலான இக்காட்சியை உக்ரைன் கலாச்சாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதை பார்க்கும் மக்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி ஒக்சானா கூறுகையில், ‛‛கண்ணி வெடி வெடித்தபோது நான் தூக்கி வீசப்பட்டு விழுந்தேன். இரண்டு கால்கள், கை விரல்களை இழந்ததை உணர்ந்தேன். இதனால் நான் வாழ விரும்பவில்லை. இதுபற்றி விக்டரிடம் கூறினேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் முன்பு கால்கள் இன்றி தோன்றுவதை நினைத்து பார்க்க முடியவில்லை. மேலும் குடும்பத்தில் யாருக்கும் சுமையாக இருக்க நான் விரும்பவில்லை. ஆனால் எனக்கு விக்டர் ஆதரவு அளித்தார். கடவுள் என்னை உயிருடன் விட்டு இருப்பதன் பின்னணியில் காரணம் இருப்பதாக கூறினார். இதை நான் ஏற்றுக்கொண்டேன். அவரது ஆதரவுக்கு நன்றி” என கண்ணீருடன் கூறினார்.

இதுபற்றி விக்டர் கூறுகயைில், ‛‛சம்பவம் நடந்தபோது நான் அவருக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தேன். கண்ணிவெடியில் மிதித்தவுடன் அருகே வராதீங்க என அவர் கூச்சலிட்டார். நான் பதற்றமடைந்து கேட்டபோது கண்ணிவெடியில் மிதித்து விட்டதாக கூறினார். அவரை மீட்க முயற்சித்தேன். ஆனால் மீட்க முடியாததை உணர்ந்த ஒக்சானா என்னை தூரம் செல்லும்படி கூறினார். நான் தூரம்செல்ல என் கண்முன்னே கண்ணிவெடி வெடித்து அவர் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்தார்.

ஒக்சானா இல்லாவிட்டால் என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவில்லை. அவள் மிகவும் வலிமையானவள். சம்பவம் நடந்தபோதும் அவள் மயங்கவில்லை. அவளை பார்த்து எனக்கு அழுகை வந்தது. ஆனால் நான் அழவில்லை. ஏனென்றால் உண்மையில் அவர் இருகால்களை இழந்துவிட்டாரா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவளுடன் இறுதிவரை இருக்க விரும்புகிறேன். அவளை நான் கைவிடப்போவது இல்லை” என்றார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய