கீவ்: உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் மெல்லத் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தற்போதைய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப. இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், உக்ரைன் ராணுவம் துணிச்சலாகச் சண்டையிட்டு வருவதால், இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போர் தொடங்கியது முதலே, பல லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டில் இருக்கும் அப்பாவி பொதுமக்களைக் குறி வைத்து ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, புச்சா உள்ளிட்ட சில நகரங்களில் இருக்கும் உக்ரைன் பெண்கள், சிறுமிகள், அவ்வளவு ஏன் ஆண்களைக் கூட குறி வைத்து ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
போர் இப்போது மீண்டும் மெல்லத் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரஷ்யப் படைகள் கடந்த புதன்கிழமை கலினின்கிராட்டின் மேற்குப் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களான போலந்து மற்றும் லிதுவேனியா இடையே அமைந்துள்ள பால்டிக் கடலில் அணு ஆயுத திறன் கொண்ட இஸ்கண்டர் மொபைல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
ஏவுகணை அமைப்புகள், விமான நிலையங்கள், ராணுவ உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டு போலி இலக்குகளை நோக்கி பல்வேறு தொடர் அட்டாக்குகள் நடத்தப்பட்டன. கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணுசக்தி படைகளை அதிக உஷார் நிலையில் இருக்க உத்தரவிட்டு இருந்தார். அதேபோல உக்ரைன் மோதலில் மேற்கு நாடுகள் நேரடியாகத் தலையிட்டால் மின்னல் வேகப் பதிலடி கொடுக்கப்படும் என்ற புதினின் எச்சரிக்கையை நம்மால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இதற்கிடையே மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் ஸ்டீல் தொழிற்சாலையில் உறுதி அளித்து இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக உக்ரைன் படைகள் எச்சரித்துள்ளது. இருப்பினும், அசோவ்ஸ்டல் ஸ்டீல் தொழிற்சாலையில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தாயாராக உள்ளதாக புதின் தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் தான் ரஷ்ய ராணுவம் அணு ஆயுதங்களைக் கொண்டு போர்ப் பயிற்சி மேற்கொண்டுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சில நாட்கள் உக்ரைன் நாட்டில் சண்டை ஓய்ந்து இருந்தது. இதற்கிடையே இப்போது உக்ரைன் நாட்டில் மீண்டும் சண்டை தொடங்கி உள்ளது. உக்ரைன் நாட்டில் பல பகுதிகளில் ஒரே இரவில் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் உக்ரைன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.