ஆணவக்கொலை.. 21 வயது மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

இந்த செய்தியை ஷியார் செய்ய

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை செய்த நெஞ்சை பதற வைக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஆணவக்கொலை நடந்து வருகின்றது. குறிப்பாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் நடக்கின்றன.

தற்போது பஞ்சாப் மகாணத்தில் 21 வயது பெண் கொடூரமான முறையில் அவரது சகோதரரால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரெனாலா குர்ட் ஒகாரா பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 21). இவர் மாடலிங் துறையில் சாதிக்க விரும்பினார். இதனால் மாடல் அழகியாகவும், நடனக்கலைஞராகவும் இருந்தார். சித்ராவின் இந்த செயலை குடும்பத்தினர் விரும்பவில்லை. இதுபற்றி அவரிடம் கூறினர்.

ஆனால் சித்ரா மாடலிங் மற்றும் நடன துறையில் சாதிக்க விரும்புவதாக அவர்களிடம் எடுத்து கூறினார். இருப்பினும் குடும்பத்தினர் உடன்படவில்லை. மாறாக இத்துறையில் இருப்பது என்பது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது. இதனால் இந்த துறையில் இருந்து விலக வேண்டும் என குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் சித்ரா அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அந்த துறையில் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் பொது இடத்தில் சித்ரா நடனமாடும் வீடியோ ஒன்றை அவரது உறவுக்காரர் பார்த்தார். பிறகு அந்த வீடியோவை சித்ராவின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போன் மூலம் அனுப்பினார். இதை பார்த்து ஹம்சா ஆத்திரமடைந்தார். வீட்டுக்கு சென்ற ஹம்சா நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கூறி சித்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர் அவரை தாக்கினார். மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் துப்பாக்கி எடுத்து சித்ராவை சுட்டார். இதில் குண்டுபாய்ந்து சித்ரா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஹம்சாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடிக்கடி இத்தகைய ஆணவக்கொலைகள் நடக்கின்றன. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 19 வயது நிரம்பிய ஆயிஷா நடனத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான கந்தீல் பலூச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொலை செய்தது பாகிஸ்தான் மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 


இந்த செய்தியை ஷியார் செய்ய