“பாய்ந்து வந்த ஏவுகணை!” தரைமட்டமான உக்ரைன் பள்ளி! 60 பேர் உடல் சிதறிய பலி.. ரஷ்யாவின் பகீர் அட்டாக்

இந்த செய்தியை ஷியார் செய்ய

கீவ்: உக்ரைன் நாட்டில் போர் இன்னும் முழுமையாக முடியாத நிலையில், ரஷ்ய ராணுவம் அதன் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா போரை ஆரம்பித்தது. இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்தும் கூட இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் சில காலம் பெரியளவில் தாக்குதல் நடைபெறாமல் இருந்தது. இப்போது கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே சண்டை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை கிழக்கு உக்ரைன் பிராந்தியமான லுஹான்ஸ்கில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியின் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியில் சுமார் 90 பேர் வரை பதுங்கி இருந்துள்ளன. இந்த பள்ளியைக் குறி மீது தான் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

உக்ரைன் நேரப்படி நேற்று மதியம் ரஷ்யப் படைகள் இந்த பள்ளியின் மீது குண்டுவீசி தாக்கி உள்ளன. இதனால் கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இந்த மோசமான தீ விபத்தில் சிக்கி சுமார் 60 பேர் வரை பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டதாகும் இடிபாடுகள் அகற்றும் பணிகள் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாகாண ஆளுநர் கெய்டாய் குறிப்பிட்டார்.

மேலும், கட்டிட ஈடுபாடுகளில் இருந்து 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் காயமடைந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உயிரிழப்புகள் மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

உக்ரைன் நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்களைக் குறி வைத்து ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைனும் மேற்குலக நாடுகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் ராணுவத்தையும் ராணுவ தளங்களையும் மட்டுமே குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் அப்பாவி மக்கள் தங்கி இருந்த பள்ளியின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றி அதிபர் ஜெலன்ஸ்கி, “300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அசோவ்ஸ்டல் ஸ்டீல் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவர்களை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்” என்றார். மரியுபோல் நகரில் உள்ள இந்த அசோவ்ஸ்டல் ஸ்டீல் தொழிற்சாலையில் பல நூறு அப்பாவி மக்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற விடாமல் ரஷ்ய ராணுவம் தடுத்து நிறுத்தி வருவதாகவும் உக்ரைன் குற்றஞ்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய