“தெருக்கள் எங்கும் பிணங்கள் கிடந்தன” – ரஷ்ய ஆக்கிரமிப்பு எல்லையில் தப்பிய பெண்ணின் கதை

இந்த செய்தியை ஷியார் செய்ய

“அது தான் எங்கள் கடைசி நிமிடங்களாக இருக்குமென்று நினைத்தோம். மிகவும் பயமாக இருந்தது. ஆனால், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.”

எலெனாவும் தப்பியோடிய குழுவும் ரஷ்ய படைகளின் சோதனைச் சாவடிகளில் ஒன்றைக் கடந்து சென்ற பிறகு, ரஷ்ய படைகள் ஷெல் தாக்குதலைத் தொடங்கிய தருணத்தை நினைவு கூர்ந்தார்.

யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான இஸ்யமில் உள்ள ஒரு மழலையர் பள்ளியின் அடித்தளத்தில் இரண்டு மாதங்களாகப் பதுங்கியிருந்த பிறகு, எலெனா பாதுகாப்பை நோக்கிய ஆபத்தான பயணத்தில் இரண்டு நாட்களை சாலையில் கழித்தார்.

ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் இருந்து வெளியேறிச் சென்ற வாகனத் தொடரணியில் இருந்த 20 பேரில் எலெனவும் அவருடைய மகளும் இருந்தனர். தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த பாதையைப் பயன்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் தப்பினார்கள்.

“அந்த நேரம் முழுவதும் நாங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம்,” என்று கூறிய 52 வயதான எலெனா, பல ரஷ்ய சோதனைச் சாவடிகளை எப்படிக் கடந்து வந்தார் என்பதை விவரித்தார். படையினர் அவர்களிடம் “எங்கு செல்கிறீர்கள்” என்று கேட்டபோது, எலெனாவோடு இருந்த குழுவினர் அவர்கள் ரஷ்யாவுக்குச் செல்வதாக படையினரை நம்ப வைத்தனர். ஒரு சோதனைச் சாவடியில் ரஷ்யர்கள் தனது மகளின் கைபேசியை வாங்கிப் பார்த்தபோது, அதில் இஸ்யத்தின் நிலைமை குறித்து நண்பர்களுக்குச் செய்தி அனுப்பியிருந்ததைப் பார்த்துக் கோபமடைந்தார்கள்.

இறுதியாக அம்மாவும் மகளும் மத்திய யுக்ரேனில் உள்ள பொல்டாவா என்ற நகரத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர். ஆனால், தான் அனைத்தையும் இழந்துவிட்டதாக உணர்ந்ததாகவும் போர் தொடங்கிய பிறகு தனது சொந்த நகரத்தில் தான் அனுபவித்த பயங்கரத்தை மறக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

“தெருக்களில் பிணங்கள் வாரக் கணக்கில் கிடக்கின்றன. மனமுடைந்து போகாமல் இருப்பதற்காக அவற்றைப் பார்க்காமல் இருக்க முயன்றோம். இறந்தவர்களை எங்களால் அடக்கம் செய்ய முடியவில்லை. ஏனெனில், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல் நடந்ததால், நாங்கள் கொல்லப்படலாம்,” என்று அவர் கூறினார்.

அடித்தளத்தில் இருந்த எலெனாவும் மற்றவர்களும் நெருப்பில் உணவு சமைத்து, தங்கள் தோட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட காய்கறிகளை உண்டு வாழ்ந்தார்கள்.

“அனைவரும் தங்களிடம் இருந்த அனைத்தையும் கொண்டு வந்தோம். நாங்கள் அனைவரும் உணவைப் பகிர்ந்துகொண்டோம். நம்பிக்கையை இழக்காமல் இருக்க அது எங்களுக்கு உதவியது,” என்று அவர் கூறினார்.

மேலும், ரஷ்ய படைகள் மக்களின் உள்ளாடைகள் உட்பட அனைத்தையும் கொள்ளையடித்து வருவதாக அவர் கூறுகிறார்.

“Z” அடையாளங்கள் வரையப்பட்டிருக்கும் திருடப்பட்ட கார்களில் படைவீரர்கள் நகரத்தைச் சுற்றி வந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

“அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் அடிக்கடி குடிபோதையிலும் இருந்தனர். எங்கள் தெருவில் ஒரு கவசப் பணியாளர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க, அதில் இயந்திரத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அமர்ந்திருந்தபோது, மிகவும் பயமாக இருந்தது. நாங்கள் மறைந்துகொள்ள முயன்றோம்,” என்றார்.

கார்ஹிவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இஸ்யம் நகரம் டான்பாஸ், யுக்ரேனின் பழைய நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் பகுதியின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. இதில், மூன்றில் ஒரு பங்கு 2014-ஆம் ஆண்டில் மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டது.

இது காடுகளால், ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் ஓர் இயற்கை கோட்டை. நகர எல்லைக்குள் கடல் மட்டத்திலிருந்து 218மீ(715 அடி) உயரத்தில் உள்ள கிரெமெனெட்ஸ் மலை உள்ளது.

“இந்த மலையை யார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாரோ அவர்கள் தரப்புக்கு குறிப்பிடத்தக்க ராணுவ நன்மை உண்டு” என்று இஸ்யம் நகர சபையின் அதிகாரியான மேக்ஸிம் ஸ்ட்ரெல்னிக் கூறினார்.

இவையனைத்தும் நகரத்தை ஒரு முதன்மையான பரிசாக ஆக்கியது. அதோடு ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, அது கடுமையான குண்டுவெடிப்புகளுக்கு உள்ளானது. ஏப்ரல் 1-ஆம் தேதி, ரஷ்யா இதைக் கைப்பற்றியது.

இப்போது, யுக்ரேனிய ராணுவத்தால் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறுமாறு கூறப்பட்டிருக்கும் ஸ்ட்ரெல்னிக், நகரத்தின் 80% பகுதிகள் அழிக்கப்பட்டதாக மதிப்பிடுகிறார். 10,000 முதல் 15,000 வரையிலான பொதுமக்கள் இஸ்யமில் உள்ளனர் என்று அவர் நம்புகிறார்.

“தண்ணீர், மின்சாரம், எரிவாயு, வெப்பமூட்டும் அமைப்பு மற்றும் கழிவுநீர் அமைப்பு என எதுவும் இல்லை,” என்கிறார் ஸ்ட்ரெல்னிக்.

மார்ச் மாதத்தில், படையெடுப்பின் ஆரம்பக் கட்டங்களில் மக்கள் தங்கள் அடித்தளங்களில் உறைபனியில் வெப்பமடையாமல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நோய்வாய்ப்பட்டவர்க்ள் மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை.

“நகரில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எங்களால் மதிப்பிட முடியாது. மருத்துவ வசதிகளோ இறுதிச் சடங்குகளோ இல்லை. இறந்தவர்கள் வீடுகளுக்கு அருகிலும் நகரப் பூங்காக்களிலும் புதைக்கப்படுகிறார்கள். இதுவொரு பயங்கரமான உண்மை,” என்று அவர் கூறினார்.

இஸ்யமில் இன்னும் சிக்கியிருப்பவர்களில், மார்ச் மாத தொடக்கத்தில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தப்பிச் சென்ற கேடரினாவின் தாயும் ஒருவர்.

“அவர் அவ்வப்போது என்னை அழைக்கிறார். இப்போது நான் பாதுகாப்பாக இருக்கும்போது கூட, என் அம்மா இல்லாத ஓர் ஊரில விடப்பட்டதால், என்னால் இங்கு 100% நலமாக உணர முடியவில்லை,” என்று கேடரினா கூறினார்.

கேடரினா வெளியே வருவதற்குள், ஏற்கெனவே ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த அவருடைய தாயார்.

ஏற்கனவே ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இசியத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த அவரது தாயார், கேடரினா வெளியே வந்த நேரத்தில், வெளியேறுவது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல ராணுவ வீரர்கள் தடை விதித்தனர்.

கேடரினா தப்பி வெளியேறதே ஒரு வேதனையான அனுபவமாக இருந்தது. அவர்களுடைய வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ரஷ்ய வெடிகுண்டு விழுந்தபோது, கேடரினாவின் குடும்பம் ஏழு நாட்களுக்கு அவர்களுடைய அடித்தளத்திலேயே தங்கியிருந்தது.

அப்போது வீட்டின் “தளம் கூரையிலிருந்து கீழே விழத் தொடங்கியது,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். மேலும், “எங்கள் அடித்தளம் குண்டுகளைத் தாங்காது என்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்,” என்று அந்தத் தருணத்தை விவரித்தார்.

அவரும் அவர் குடும்பமும் புறப்படுவதற்குத் தயாராவதற்கு 15 நிமிடங்களே இருந்தன. அவர்கள் மிகக் குறைவான பொருட்களையே எடுத்துக் கொண்டனர். அவர்களின் செல்லப் பிராணிகளைக் கூட விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் சென்றதும்,

அவரும் அவரின் குடும்பமும் புறப்படுவதற்கு தயாராவதற்கு 15 நிமிடங்களே இருந்தன. அவர்கள் மிகக் குறைவாகவே உடமைகளை எடுத்துக் கொண்டனர் – குழந்தைகள் ஆடைகள் மட்டுமே. குடும்பத்தின் செல்லப்பிராணிகளைக் கூட விட்டுச் செல்ல வேண்டியிருந்தது.

அவர்கள் தப்பிச் செல்லும்போது, தலைக்கு மேலே வெடிகுண்டுகள் விழுவது கேட்பதாகவும் “அந்த உணர்விலிருந்து விடுபட இயலாது,” என்றும் அவர் கூறினார்.

ஸ்ட்ரெல்னிக், யுக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மண்டலத்தில் இருந்தாலும், இன்னும் உள்ளே இருக்கும் மக்களுக்கு உதவ முயல முடியும் என்பதை உறுதி செய்ய, இஸ்யமுக்கு அருகில் இருந்தார். ஆனால், அவர்களுடனான தொடர்பு நம்பமுடியாத அளவுக்குக் கடினமாக உள்ளது.

கடந்த ஏழு நாட்களாக, ஊருக்கும் வெளியுலகுக்குமான கைபேசி இணைப்பு இல்லை. இன்னும் உள்ளே இருப்பவர்களின் குடும்பத்தினர், அவர்களுடைய குரலைக் கேட்க விரும்புவதாக அவர் கூறுகிறார்.

கைபேசி கவரேஜ் இல்லாதது வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இவர் யுக்ரேன் அதிபர் இல்லை, ஆனால் அதே பெயரிலுள்ள ஒரு சாதாரண குடிமகன். நகரத்திற்குள் இருப்பவர்கள் வெளியேறுவதற்கு உதவ முன்வந்தார். சிக்னல் கிடைத்தவுடன், நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள சிறிய கிராமங்களில் வசிப்பவர்களைக் கூட்டிச் செல்லும் பேருந்துகளைப் பற்றி வெளியே உறவினர்கள் நகருக்குள் இருந்தவர்களுக்குத் தெரிவித்தார்கள். மீட்பு முயற்சி மிகவும் ஆபத்தான வேலை என்று கூறிய ஸெலென்ஸ்கி, “நாங்கள் சுமார் 200 பேரை வெளியேற்றினோம். மக்களை வெளியேற்ற வேண்டிய இடங்களுக்குச் சென்றபோது மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள். வாரக்கணக்கில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. கடைசியாக எங்களைப் பார்த்ததும், நாங்கள் அவர்களின் மீட்பர்கள் என்று நினைத்தார்கள்,” என்றார்.

“எங்கள் தன்னார்வலர்கள் கடைசியாக (அருகிலுள்ள கிராமமான) ஸ்பைவாகிவாவில் இருந்து மக்களை வெளியேற்றியபோது, அவர்கள் ரஷ்ய ஸ்னைப்பர்களால் சுடப்பட்டார்கள். அதில் 3 பேர் கொல்லப்பட்டனர், 3 காயமடைந்தனர்,” என்று அவர் கூறினார்.

பிபிசியால் இந்தக் கூற்றை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

கேடரினா மற்றும் எலெனா இருவரும் தாங்கள் முயன்றபோது, இஸ்யம் நகரைவிட்டுத் தப்பிக்க முடிந்தமைக்காக தங்களை அதிர்ஷ்டசாலிகளாகக் கருதுகிறார்கள்.

ஆனால், அமைதிக் காலத்தில் அவர்களின் வீட்டைப் பற்றிய நினைவுகள் அவர்களை வேட்டையாடுகின்றன.

குழந்தைக்ளுக்கான பூங்காக்கள் உட்பட தனக்குத் தேவையான அனைத்தும் இருந்ததாகக் கூறும் கேடரினா அந்த இடத்தை நினைவில் கொண்டுள்ளார். “அதுவொரு சிறிய பஞ்சுபோன்ற தலையணை போல மிகவும் அழகாகவும் வசதியாகவும் இருந்தது. நம் அம்மா நம்மைக் கட்டியணைப்பதைப் போன்ற உணர்வு அது,” என்று அவர் கூறினார்.

எலெனா தனது பேத்தியுடன் தோட்டத்தில் பூக்களை நடும் நாட்களை நினைத்து ஏங்குகிறார்.

“நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை நாங்கள் உணரவில்லை. நான் ஒரு சொர்க்கத்தில் வாழ்ந்தேன் என்பதை இப்போது உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய