“ஹிட்லரின் நாஜி படைகளைப் போல..” பளிச் என கூறிய ரஷ்ய அதிபர் புதின்.. உக்ரைன் போரில் அடுத்து என்ன

இந்த செய்தியை ஷியார் செய்ய

கீவ்: உக்ரைன் நாட்டில் தொடங்கிய போர் 2 மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில், அந்த போர் இரு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இடையே அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் சண்டை சற்றே ஓய்ந்திருந்தது. இருப்பினும், இந்த சில வாரங்களிலேயே இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துவிட்டது.

உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே, மரியுபோல் நகரை ரஷ்யா முழுமையாகத் தன்வசப்படுத்தியது. அதேபோல சமீபத்தில் உக்ரைன் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதனிடையே ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவுகூர்ந்தார். அதேபோல உக்ரைன் போரிலும் ரஷ்யா ராணுவம் வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அதேநேரம் உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் வீரத்தையும் குறிப்பிட்ட புதின், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய அரசு நிச்சம் உதவும் என்று தெரிவித்தார்

 

நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியின் 77வது ஆண்டு விழாவில் ரஷ்யாவின் ரெட் சதுக்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பெருந்திரளான பாதுகாப்புப் படையினருக்கு மத்தியில் உரையாற்றிய புதின், “ரஷ்யாவைப் பலவீனப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அந்நிய சக்திகள் முயன்று வருகின்றன. அது ஒருபோதும் இங்கே நிறைவேறாது. நேட்டோ படையினர் நமது எல்லைக்கு அருகே அச்சுறுத்தல்களை புதுப்புது அச்சுறுத்தல்களை உருவாக்குகிறது. அதை முறியடிப்போம்” என்றார்.

 

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் போரிடும் வீரர்களிடம் நேரடியாகப் பேசிய அவர், “அவர்கள் (உக்ரைன்) கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் டான்பாஸ் பகுதி விடுவிக்கப்படும். இரண்டாம் உலகப் போரில் கற்றதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் அனைவரும் தாய்நாட்டிற்காக, அதன் எதிர்காலத்திற்காகப் போராடுகிறோம். இங்குக் கொலையாளிகள், வன்முறையாளர்கள் நாஜிக்களுக்கு இடமில்லை. இந்த போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உழப்பு ஈடு செய்ய முடியாதது” என்றும் அவர் தெரிவித்தார்.

 

போர் ஆரம்பித்து 75 நாட்கள் ஆகும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் இந்த 11 நிமிட பேச்சு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சில் புதின் எந்த இடத்திலும் உக்ரைனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. அதேபோல போரின் இப்போது என்ன நிலை, எப்போது போர் முடியும் என்பது குறித்தும் அவர் எவ்வித தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. மேலும், மரியுபோல் நகரின் நிலை குறித்தும் அவர் எதாவது கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்தும் புதின் எதுவும் கூறவில்லை.


இந்த செய்தியை ஷியார் செய்ய