சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மந்திரவாதியை வரவழைத்து மாந்திரீகம் செய்யும் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மந்திரவாதியை வரவழைத்து மாந்திரீகம் செய்யும் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் அப்போது பணியிலிருந்த மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூடநம்பிக்கை சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துமனையில் அரங்கேறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கொரோனாவை விட வேகமாக பரவக்கூடிய ஒரு சமூக நோய் உண்டு என்றால் அது மூடநம்பிக்கை என்றே சொல்லலாம். இதற்கு குறுக்கு வழியில் பணத்தை தேடும் திருட்டு உலகமடா என்பதற்கேற்ப குறுக்கு வழியில் பலனை அடைய நினைப்பது தான் மூலக் காரணமாகும். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும் கூட, இந்த பலவீனத்தை தங்களது மூலதனமாக்கி விஷச் செடிபோல போலிச்சாமியார்கள், சோதிடர்களும் முளைத்து வருகின்றனர். பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை என்கிறார்கள் ஏன் நாய் பசு போன்று அதுவும் ஒரு பிராணி தானே என்று எவரும் கேள்வி எழுப்புவதில்லை. அர்த்தமில்லாமல் சொல்லப்படும் காரணங்கள் அதை அப்படியே நம்புவது தான் மூடநம்பிக்கை. இப்படி ஒவ்வொன்றையும் நம்பி நம்பி இந்த மக்கள் ஏமாறும் அவலம் தொடர்கிறது.
சமூகத்தில் மூட நம்பிக்கைகள் அதிகரித்துவிட்டதால் ஏராளமான சாமியார்கள் உருவெடுத்து வருகின்றனர். கற்பூர சாமியார், சாம்பிராணி சாமியார், ஊதுபத்தி சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள், இப்போது பீர் சாமியார், பிராந்தி சாமியார் என்றும்கூட உலா வருகிறார்கள். இந்தவகை சாமியார்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை எனலாம், சிலருக்கு இவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்குதான், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் வைத்தே சாமியார் ஒருவர் மாந்திரீகம் சடங்குகள் செய்துள்ள சம்பவம் தான் அது. அதாவது உத்தரபிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு தீய ஆவி பிடித்து விட்டதாகவும், அதை விரட்டுவதற்காக மருத்துவமனையில் அமர்ந்து மந்திரவாதி ஒருவர் சடங்குகள் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட மருத்துவமனையில் இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியா பாய் அஹிர்வார் என்று 65 வயதான பெண்மணி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அசோக் நகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது அந்தப் பெண்ணுக்கு தீய ஆவி பிடித்திருப்பதாக சிலர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆவி விரட்ட மந்திரவாதி ஒருவரை அழைத்துவரப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் வைத்து சில மாந்திரீக சடங்குகள் செய்யப்பட்டது. அவை மருத்துவர்கள் இருந்தபோதே நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. இதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளரிடம் விளக்கும் அளித்துள்ள துறை அதிகாரிகள் இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், மருத்துவமனையில் இதுபோன்று நடவடிக்கைகள் நடந்திருக்க கூடாது, எனவே அப்போது பணியில் இருந்த மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.