சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை சம்பவத்தில், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டின் கதவில் கொலையாளிகள் மின்சார இணைப்பு கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நேபாளத்தைச் கிருஷ்ணாவே, 3 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஊள்ளூர் ஆட்களை நம்பாத ஸ்ரீகாந்த், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். அந்தவகையில் கிருஷ்ணாவின் தந்தை லால்சர்மா, இறந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்திடம் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
குடும்பத்தினருடன் ஸ்ரீகாந்தின் வீட்டிலேயே ஒரு அறையில் தங்கி வந்துள்ளார். பின்னர் அவருக்குச் சொந்தமான மாமல்லபுரம் பண்ணை வீட்டில் காவலாளியாக நியமித்து அங்கேயே தங்க வைத்திருந்தார். அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஸ்ரீகாந்த், அவரது மகன் கிருஷ்ணாவை டிரைவராக பணியில் சேர்த்துள்ளார். அதிலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று வர கிருஷ்ணாவுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளார். இந்த நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரது நம்பிக்கியை பொய்யாக்கிவிட்டார் கொலையாளி கிருஷ்ணா..
கொலை செய்ய 3 மாதங்களாக திட்டம் தீட்டி வந்த கிருஷ்ணா, பிணங்களை புதைப்பதற்காக , பண்ணை வீட்டில் இருந்த தனது குடும்பத்தாரை 3 நாட்களுக்கு முன்பே ஏதேதோ காரணங்களைச் சொல்லி நேபாளத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அத்துடன் பண்ணை வீட்டில் உடலை புதைப்பதற்காக 7 அடி ஆழத்தில் குழிதோண்டி தயாராக வைத்திருந்துள்ளனர். கொலை செய்து விட்டு, உடலைகளையும் பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு , சுமார் 8 கோடி மதிப்பிலான 1000 சவரன் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களுடன் தப்பியோடிய கொலையாளிகள் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பன் ரவியையும், போலீஸார் 6 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடன் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சடலங்களை புதைத்த பின்னர் இருவரும் பண்ணை வீட்டின் கதவில், மின்சார இணைப்பை கொடுத்துள்ளனர். யாராவது வந்து கதவைத் தொட்டால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வகையில் கிருஷ்ணாவும், ரவியும் இந்த ஏற்பாட்டை செய்துவைத்து விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவும், ரவி ராயும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளனர். அமெரிக்கா மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் இன்று இரவு சென்னை வர உள்ளனர். இதனையடுத்து பெற்றோரின் உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.