சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மூளையில் பாதிப்பு! என்ன நோய்? சிகிச்சை முறை என்ன? பரபர தகவல்

இந்த செய்தியை ஷியார் செய்ய

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் மூளை பகுதியில் தீவிர நோய்ப் பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

கடந்த 2013ஆம் ஆண்டு சீனாவின் 7ஆவது அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் சீன அதிபர் ஜி ஜின்பிங். சீனாவின் அசுர வளர்ச்சி காரணமாகச் சர்வதேச அரங்கில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜி ஜின்பிங் வலம் வருகிறார்.

அதேநேரம் 68 வயதாகும் ஜி ஜின்பிங்கின் உடல்நிலை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் அவருக்கு மூளைப் பகுதியில் மோசமான நோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ‘பெருமூளை அனியூரிஸம்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2021ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாகப் பாரம்பரிய சீன மருந்துகளைக் கொண்டே சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் ரத்த நாளங்கள் மென்மையாகி அனீரிஸம் சுருங்கும்.

மூளையில் உள்ள ரத்தக் குழாய் பலவீனம் அடைந்து, பலூன் போன்ற அமைப்புகள் ஏற்பட்டு, அது ரத்தத்தால் நிரம்புவதே பெருமூளை அனியூரிஸம் நோய் ஆகும். மூளையின் அடிப்பகுதிக்கும் மண்டை ஓட்டிற்கு இடையே தான் இந்த அனியூரிஸம் ஏற்படுகின்றன. அனியூரிஸம் கசிவு அல்லது சிதைவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும், உயர் ரத்த அழுத்தம், புகைப்பது, தலையில் அடி பட்டால் இந்த பெருமூளை அனியூரிஸம் பாதிப்பு ஏற்படும்.

ஜி ஜின்பிங் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி இருந்தது. கொரோனா தொடங்கிய காலம் முதல் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் வரை அவர் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார். கடந்த 2019 மார்ச் மாதம் ஜி ஜின்பிங் இத்தாலி சென்றிருந்த போதும் கூட, அவரது நடை அசாதாரணமாகவும் தளர்வுடன் காணப்பட்டது. பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது, உட்காரக் கூட அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது.

இதேபோல், கடந்த அக்டோபர் 2020இல் ஷென்சென் நகரில் மக்களிடையே ஜி ஜின்பிங்க உரையாற்றிய போது, அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். மேலும், அவரது பேச்சும் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இருந்தது. பேசும் போதும் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக அப்போதே ஜி ஜின்பிங் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஜி ஜின்பிங் தன்னை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டார். சீன வரலாற்றிலேயே தனது ஆட்சியில் தான், வளர்ச்சி அபரிவிதமாக இருந்ததாகக் கூறி ஜி ஜின்பிங் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்தச் சூழலில், அவரது உடல்நிலை குறித்த இந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய