வெளிநாட்டு வேலை மோகம்.. பறிபோன பணம்.. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட தாய்-மகள்

இந்த செய்தியை ஷியார் செய்ய

பல பேரை ஏமாற்றி தாய் மற்றும் மகள் இணைந்து பணமோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சென்னை வேளச்சேரி, பாரதி நகர் அடுத்த பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா (34). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வெளிநாட்டு வேலையின் மோகம் ஏற்படவே வெளிநாடுக்கு சென்று வேலை பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியுள்ளது.

எனவே இவர் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கோயம்பேட்டில் உள்ள ‘அசிஸ்ட் கேரியர் ஜெனரேட்டிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்தில் நேரில் சென்று அணுகியுள்ளார். அங்கு கிளீனா கிரியேட்டர் (29) மற்றும் அவரது தாய் அனிதா கிரியேட்டர் (59) என்பவர்களின் நட்பு கிடைத்துள்ளது. அவர்கள் தன்ஷிகாவை போர்ச்சுகல் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு அவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் தாய் மகள் இருவரும் தன்ஷிகாவிற்கு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

 

இதனால் கடுப்பான தன்ஷிகா அவர்களிடம் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எனக் கூறி தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர் பணம் கேட்டு நச்சரிக்கவே தாய் மற்றும் மகள் இருவரும் சிறிது சிறிதாக 11 லட்சம் ரூபாய் வரை திருப்பி கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் தாய் – மகள் இருவரும் அவர்களது செல்போனை ஆஃப் செய்துவிட்டு தன்ஷிகாவிடமிருந்து தப்பித்து டிமிக்கி கொடுத்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களது அலுவலகத்தையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக தன்சிகா கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. ஆகவே தன்ஷிகா அடையார் துணை ஆணையர் மகேந்திரன் அவர்களை கடந்தமாதம் அணுகி நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதன்பின்னர் நேற்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்று இருந்தனர். அப்போது அவர்கள் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினார். அவர்களை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இதைப்போல அவர்கள் பல பேரிடம் ஏமாற்றி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள சம்பவம் தெரியவந்தது.


இந்த செய்தியை ஷியார் செய்ய