மரணத்திலும் பிரிய மனமில்லை.. 21 ஆண்டுகள் மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த 72 வயது தாத்தா!

இந்த செய்தியை ஷியார் செய்ய

பாங்காக்: தீராத காதல் காரணமாக தனது மனைவியின் சடலத்தைக்கூட பிரிய மனமில்லாமல், 21 ஆண்டுகள் அதனுடனேயே வாழ்ந்து வந்துள்ளார் தாய்லாந்தைச் சேர்ந்த 72 வயது தாத்தா ஒருவர்.

மரணம் மட்டுமே நம்மை பிரிக்க முடியும் என காதலர்கள் வசனம் பேசுவதை திரைப்படங்களில் பார்த்திருப்போம்… நேரிலும் கேட்டிருப்போம். ஆனால் அந்த மரணம்கூட தன் காதல் மனைவியை தன்னிடமிருந்து பிரித்துவிடக் கூடாது என நினைத்து 21 ஆண்டுகள் மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார் தாய்லாந்தைச் சேர்ந்த சார்ன் என்ற தாத்தா.

 

தாய்லந்து ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர் சார்ன். அப்போது தன்னுடன் வேலை பார்த்த பெண்ணைக் காதலித்து மணந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் காலமானார் சார்ன்னின் மனைவி. மரணத்தால் தன் காதல் மனைவியை பிரிய சார்ன் விரும்பவில்லை.

எனவே, மனைவியின் உடலை சவப்பெட்டியில் போட்டு அதனை தன்னுடன் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ள அவர் முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவுக்கு அவரது மகன்கள் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை -மகன்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.

 

அக்கம்பக்கத்தார், உறவினர்கள் என யாருக்கும் தெரியாமல் தனது மனைவியின் உடலை கடந்த 21 ஆண்டுகளாக தனது அறையிலேயே வைத்து பாதுகாத்துள்ளார் சார்ன். அந்த சவப்பெட்டியின் அருகிலேயே படுத்து உறங்குவது, அதனுடன் பேசுவது என தன் மனைவியின் சடலத்துடன் ஒரு கற்பனையான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் சார்ன்.

வயோதிகம் அதிகமானதால், தன் மரணத்திற்குப் பிறகு தன் மனைவியின் உடலுக்கு முறையான இறுதிச்சடங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் சமீபத்தில் சார்ன்னுக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தன் மனைவியின் சவப்பெட்டியை முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய தொண்டுநிறுவனம் ஒன்றை அவர் அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்துதான் அவர் கடந்த 21 வருடங்களாக மனைவியின் உடலுடன் வாழ்ந்த அதிர்ச்சித் தகவல் மற்றவர்களுக்கு தெரிய வந்தது.

 

அந்த தொண்டுநிறுவனத்தின் உதவியுடன் தனது மனைவியின் உடலை அவர் தகனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், இடையில் ஆடையே நிற்காத அளவிற்கு வயோதிகத்துடன் தள்ளாடியபடி நடந்து செல்கிறார் சார்ன். மனைவியின் சாம்பலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அதை சார்ன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக சார்ன் மீது அந்நாட்டு அரசு சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. காரணம் சார்ன் தனது மனைவியின் சடலத்தைத்தான் எரிக்கவில்லையே தவிர, அவரது இறப்பை முறைப்படி பதிவு செய்து உரிய சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ளார். அதிகம் படித்து பட்டங்கள் பெற்ற சார்ன், மனைவியின் உடலுடன் வசித்த வீட்டில் மின்வசதிகூட இல்லை என தொண்டுநிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய