நான் சொல்லும் கட்சி பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்கணும் – திமுக பிரமுகர் அய்யனாரின் பாலியல் தொல்லை

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

திமுக நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து காவல் நிலையத்தின் முன்பாக பெண் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மம்சாபுரம் கிராமம். இக் கிராமத்தில் இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தாய் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் கவிதா. இவர் குடும்ப வருமானத்திற்காக வீடு வீடாக சென்று அப்பளம், வெள்ளை பூண்டு விற்று வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக பேரூர் கழகத் துணைத் தலைவரும் தற்போதைய திமுக பிரமுகருமான அய்யனார் என்பவர் இரண்டு மாதங்களாக கவிதாவுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக கவிதா குற்றம் சாட்டுகிறார்.

கவிதாவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல், கவிதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்காக தான் சொல்லும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும், அதற்கு இணங்க மறுத்ததால் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மிரட்டலுக்கும் கவிதா அஞ்சாமல் இருந்ததால் அடியாட்களுடன் கவிதா வீட்டிற்கு சென்று , தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்து கவிதாவையும் அவரது தாயாரையும் தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கவிதாவும் அவரது தாயாகவும் இது தொடர்பாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் கட்சி பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்கவும் வற்புறுத்தி தன்னையும் தாயையும் தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறுகிறார் கவிதா.

கவிதாவுக்கு ஆதரவாக சிலர் சமூக நல ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக பிரமுகர் அய்யனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தில் கவிதா போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய