தருமபுரி அரசு மருத்துவமனையில் இளைஞர் அடித்துக் கொலை – ஒருவர் கைது!

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

தருமபுரி அரசு மருத்துவமனையில் சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, தம்பி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னன் (23). இவரது அக்காவுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த, ராஜேஷ் (31) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த ராஜேஸ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார். அந்த பெண் மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்த ராஜேஸ் அவரை சராமாரியாக தாக்கி உள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடிவரவே, ராஜேஸ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை, கிராமத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவமனை வளாகத்தில் சென்னன் மற்றும் அவரது உறவினர்கள் நின்றிருந்தபோது, அங்கு ராஜேஸ் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சென்னன், ராஜேஸை தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார், ராஜேஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சென்னனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய