கலவர பூமியாக மாறியுள்ள இலங்கை, பிரதமர் மகிந்த ராஜபக்சே தப்பியோட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
அப்போது அவர், ‘புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக 11 எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மூன்று பேரின் பெயர்கள் தமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரையின்படி இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கும்.
நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தவும், அதிபரின் அதிகாரங்களை குறைத்து கொள்வது குறித்து புதிதாக அமைய உள்ள அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
புதிதாத அமையும் அரசின் மூலம் இலங்கை மக்களின் நம்பிக்கையை விரைவில் மீட்டெடுப்போம். தேசத்தின் நலன்கருதி நாட்டு மக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும்’ என்று கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, நாட்டின் அரசியல் நிலையற்ற தன்மை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படாவிட்டால், தான் பதவி விலக வேண்டிவரும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த அறிவிப்பை கோத்தபய வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது