இலங்கைக்கு செல்லும் தமிழக அரசின் உதவி பொருள்.! ஸ்டிக்கர் ஒட்டாமல் அனுப்பப்பட்ட பார்சலை பார்த்து வியந்த மக்கள்

இந்த செய்தியை ஷியார் செய்ய

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரச் சிக்கலில் தவித்துவருகிறது. ஒவ்வொரு பொருள்களின் விலையும் விண்ணைத் தொடும் நிலையில் இருக்கிறது. வேலையின்மை, சம்பளக் குறைவு உள்ளிட்டவற்றால் வாங்கும் திறனை இலங்கை மக்கள் இழந்துள்ளனர்.  இதன் காரணமாக தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்
டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்த நேரத்தில், பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க இருப்பதாகவும் இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.   இதனையடுத்து  கடந்த மாதம் 7-ந் தேதி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரோடு தொலைபேசியில் பேசி இலங்கை தமிழர்களின் நலன் கருதி தமிழக அரசு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப தயாராக இருக்கிறது. இதை இந்திய தூதரகம் மூலமாக விநியோகிக்க உரிய அனுமதியும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்திடும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக, 80 கோடி ரூபாயில் 40,000 டன் அரிசியும், 28 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடரும் வழங்கத் தமிழக அரசு முனைப்புடன் இருப்பதாக முதல்வர் சட்டமன்றத்திலேயே பேசினார்” இதற்கு ஆதரவளித்து அனைத்து கட்சி சார்பாகவும் உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் உறுதியளித்தார். இதே போல திமுக  உள்ளிட்ட பல்வேறு கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினர்.

இந்தநிலையில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் உணவுபொருட்களை தமிழக அரசு பார்சல் செய்துள்ளது. அதில், அரிசி, பருப்பு, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதலமைச்சர் மற்றும் எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை மத்திய மற்றும் மாநில அரசின் முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய