Posted in

தோற்கப் போகும் குதிரையிடம் சென்று பணம் கட்டி பரிந்து பேசிய So-Called தமிழ் தேசியவாதிகள் !

“பணத்தைக் கட்டி” என்று நாம் எழுதும்போது, பணம் கொடுத்துதான் ஸ்டாலினைப் பார்த்தார்களோ என்று நாம் சொல்ல வருவதாக நினைக்க வேண்டாம். சொந்தப் பணத்தைச் செலவழித்து விமானச் சீட்டு வாங்கி, சென்னை தி.நகரில் விடுதி எடுத்து, இப்படிப் பணத்தைச் செலவு செய்து தோற்கப்போகும் ஒரு கட்சியைச் சென்று பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விஷயம்? ‘தமிழ்த் தேசியம்‘ என்று தொண்டை கிழியப் பேசும் இவர்கள், 2009-இல் எமக்குத் துரோகம் இழைத்த திமுகவை எப்படிச் சென்று சந்தித்தார்கள்?

இதில் கோரிக்கை மனு வேறு கொடுத்துள்ளார்கள். 2026-ஆம் ஆண்டு தேர்தலில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடும் நிலையில் திமுக இருக்க, அவர்களைச் சென்று சந்தித்து ஈழத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாகப் பேசுவது எந்த வகை முதிர்ச்சி? இவர்களைப் போன்றவர்களைத் திருத்தவே முடியாது. தற்போதைய முதல்வரைச் சந்தித்தோம் என்று ஒரு புகைப்படத்தை எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டால், ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள்.

இவர்களுக்குத் தெரிந்த அரசியல் இதுதான். 2009-ஆம் ஆண்டு எமது இனத்தை இலங்கை இராணுவம் கொன்று குவித்தபோது, இதே திமுக அரசு தமிழகத்தில் ஈழப்போர் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று பல ஊடக நிறுவனங்களுக்குக் கட்டளையிட்டது. கபட நாடகம் ஆடி, ஒரு மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் கலைஞர் கருணாநிதி. “ஈழத்தில் போர் நிறுத்தம் வந்துவிட்டது” என்று பொய் கூறித் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

கடைசியில் கேட்டால், “மத்திய அரசு (காங்கிரஸ்) என்னிடம் பொய் கூறிவிட்டது, அதனால்தான் நான் எனது உண்ணாவிரதத்தை ஒரு மணி நேரத்தில் முடித்தேன்” என்று சற்றும் வாய் கூசாமல் பொய் சொன்னார் கலைஞர். அவரது மகன் ஒன்றும் சளைத்தவர் அல்ல. தமிழ்நாட்டில் திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைகிறது என்றால், உடனே கையில் ஈழத் தமிழர் பிரச்சினையை எடுத்துப் பேசி, மக்களிடம் கைதட்டல் வாங்குவது ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில், தம்மைத் தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தும் கஜேந்திரகுமார், கஜன் போன்ற அரசியல்வாதிகள், ஸ்டாலினைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுத்ததோடு, மீனவர்கள் சம்பந்தமாகவும் பேசியுள்ளார்களாம். தமிழகக் கடலோரங்களில் மீன்கள் இல்லை என்பது பல வருடங்களாகத் தெரிந்த விஷயம். இலங்கை கடலோரம், அதுவும் கச்சத்தீவு பக்கமாகத்தான் அதிக மீன் வளம் உள்ளது. இதனைப் பெரும் இழுவைப் படகுகளில் வந்து இந்திய மீனவர்கள் சூறையாடிச் செல்கிறார்கள்.

இரண்டு கிலோமீட்டர் நீளமான வலையைப் போட்டு ஈழத்து மீன் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடிச் செல்லும்போது, அதனை வேடிக்கை பார்க்க முடியுமா? இதனைப் போய் தமிழக முதல்வரிடம் சொன்னால், அடுத்த கணமே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு வருவதை நிறுத்திவிடுவார்களா என்ன? இது எல்லாமே ஒரு ‘பீலா’ காட்டும் விளையாட்டுதான். “நானும் ரவுடிதான்” என்பது போல, நாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்று தமது இருப்பை உறுதி செய்யவே இப்படி நடக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது.