மர்மதேசத்தில் நுழைந்த கொரோனா.. பதறிப்போன அதிபர் கிம் ஜாங் உன்.. என்ன நடக்கிறது வடகொரியாவில்?

இந்த செய்தியை ஷியார் செய்ய

சியோல்: மர்மதேசமாக கூறப்படும் வடகொரியாவில் முதல் முதலாக ஒருவர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முதற்கட்டமாக தலைநகர் பியாங்யாங்கில் ஊரடங்கு அமலான நிலையில் அவரசகால வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இங்கு நடக்கும் பல்வேறு விஷயங்கள் வெளியுலகிற்கு தெரிவது இல்லை. இதனால் வடகொரியா மர்மதேசமாக அறியப்படுகிறது.

மேலும் நாட்டின் சட்டங்கள் கடினமானதாக உள்ளது. இதனால் மக்களுக்கு விசித்திரமான தண்டனைகளும் வழங்கப்படுவது உண்டு. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் கண்டுகொள்ளாமல் கிம் ஜாங் உன் தொடர்ச்சியாக அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020 ஜனவரியில் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை முடக்கியது. ஊரடங்கு என்ற பெயரில் மக்கள் வீட்டில் முடங்கினர். ஏறக்குறைய உலகில் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் நிலையில் விதிவிலக்காக வடகொரியா உள்ளது.

 

சீனாவில் அண்டை நாடாக இருந்தாலும் கூட வடகொரியாவில் பாதிப்புகள் இல்லை என கிம் ஜாங் உன் கூறி வந்தார். இதை உறுதி செய்யும் வகையில் தான் உலக சுகாதார அமைப்பின் தினசரி பாதிப்பு தொடர்பான விபரங்களிலும் கூட வடகொரியாவில் கொரோனா பாதிப்பு, இறந்தோர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தன.

இந்நிலையில் தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். தலைநகர் பியாங்யாங்க்கில் வசிக்கும் நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அந்த நபருக்கு எப்படி கொரோனா வைரஸ் பரவியது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து கிம் ஜாங் உன் அவசரமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையை அமல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் குறுகிய காலத்தில் கொரோனா வைரஸை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். மாவட்டங்கள், நாட்டு எல்லைகளை மூட வேண்டும். பொதுமக்களை வீட்டில் இருக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்மூலம் வடகொரியாவில் கட்டுப்பாடுகள் அமலாக உள்ளன. முதற்கட்டமாக பிற நாடுகளுடனான எல்லைகள் மூடப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக தலைநகர் பியாங்யாங்க்கில் 2 நாள் ஊரடங்கு அமலாகி உள்ளது. வைரஸ் பாதிப்பு பிறருக்கும் கண்டறியப்பட்டால் இந்த கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது.

 

வடகொரியாவில் மொத்தம் 25 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) மக்கள் உள்ளனர். இன்னும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. உலக சுகாதார நிறுவனம், சீனா, ரஷ்யா நாடுகள் வழங்குவதாக கூறிய தடுப்பூசிகளையும் வடகொரியா ஏற்க மறுத்துவிட்டது. கொரோனா தடுப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றும் என சுகாதார நிபுணர்கள் கூறும் நிலையில் வடகொரியா மக்கள் இன்னும் அதை செய்யவில்லை. இதனால் வைரஸ் பரவலை முதற்கட்டமாகவே தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வடகொரியாவுக்கு ஆபத்து நேரிடலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய