அடம் பிடிக்கும் விளாடிமிர் புடின் – போரை நிறுத்த முடியாது என கறார்!

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் என புடின் தெரிவித்துள்ளார்
உக்ரைன் சண்டை போடுவதை நிறுத்தும் வரை எங்களது தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளார்.

சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, அந்நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதனால், எல்லையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது.

 

இதை அடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, “நேட்டோ” அமைப்பில் இணைய, உக்ரைன் ஆர்வம் காட்டியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் கோபம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீது படையெடுக்க, ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் கோரத் தாண்டவமாடின. இந்தத் தாக்குதலில், பொது மக்கள் உட்பட 200 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று, உக்ரைன் விவகாரம் தொடர்பாக, துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அவர், போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, விளாடிமிர் புடினிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு, சண்டை போடுவதை உக்ரைன் நிறுத்தும் வரை, ரஷ்யாவின் தாக்குதல் நடத்தும் என அவரிடம் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கிடையே உக்ரைன் நாட்டின் வினிட்ஸ்யா விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில், விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்தது.


இந்த செய்தியை ஷியார் செய்ய