கடந்த 12-ஆம் திகதி, சரியாகக் காலை 9:04 மணிக்கு, காவல்துறையின் அவசர சேவைப் பிரிவான 999-க்கு ஓர் அழைப்பு வந்தது. செயின்ட் ஜார்ஜ் ஷாப்பிங் சென்டரில் (St George’s shopping centre) இருந்து, உயரமான இடத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துவிட்டார் என்று பதற்றத்துடன் பேசிய பெண் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
உடனே காவல்துறை பாரா மெடிக்ஸ் (Paramedics – முதலுதவி சிகிச்சை அளிப்போர்) குழுவை அந்த இடத்திற்கு அனுப்பியதோடு, தாமும் விரைந்து சென்றார்கள். ஆனால், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
யாழ் குடத்தனையைச் சேர்ந்த குடும்பம்
இந்த ஈழத் தமிழ்ச் சிறுவனின் குடும்பத்தார், யாழ் குடத்தனையைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது. இங்கே அவரது பெயரை நாம் குறிப்பிட விரும்பவில்லை. இவருக்கு வெறும் 17 வயதுதான் ஆகிறது.
குறிப்பிட்ட ஷாப்பிங் சென்டரில் இருந்து இவரால் தற்செயலாகத் தவறி விழுந்திருக்க முடியாது என்றும், அங்கே பல பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்றும், ஷாப்பிங் சென்டரைப் பராமரிக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நண்பர்களின் தகவல்: மன வருத்தமே காரணமா?
மேற்கொண்டு அவரது நண்பர்கள் தெரிவித்ததாவது: நன்றாகப் படித்து வந்த அவருக்கு, அவர் ஆசைப்பட்ட பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவில்லை என்ற பெரும் மன வருத்தம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன், தனது குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துள்ளான். அதனால் நல்ல பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, நல்ல வேலை ஒன்றைச் செய்து, தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்துள்ளான்.
அது தவறியதால் இந்த முடிவை எட்டிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுவதாக அவரது நண்பர் ஒருவர் எமக்குத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவரது அப்பா, அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து வந்த நிலையில், எப்படியாவது ஒரு வகையில் மேம்பட்ட வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்றே அவர் எண்ணியுள்ளார். ஊதாரித்தனமாக… கஞ்சா அடித்து, வெள்ளி, சனியில் பப்புக்குக் குடிப்பதற்காகச் செல்லும் இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு அருமையான, உன்னதமான மாணவன் இருந்துள்ளான் என்பது பெரும் ஆச்சரியம்தான்.
பெற்றோருக்கான ஒரு வேண்டுகோள்
உண்மையில் எங்கள் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் ? எதற்காகக் கவலைப்படுகிறார்கள் ? என்ன நடக்கிறது ? என்பது போன்ற விஷயங்களை நாம் கவனிப்பது நல்லது. இருந்தாலும் சில பிள்ளைகள் அதனைத் தாய் தந்தைக்கு வெளிப்படுத்துவது இல்லை.
இந்தச் சிறுவனின் மன நிலையை… பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் உணர்ந்திருந்தால் கூட, இதனைத் தடுத்திருக்க முடியும். இல்லை, நண்பர்களாவது அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்க முடியும்.
போன உயிரை இனி நம்மால் கொண்டுவர முடியாது. ஆனால் இப்படி ஓர் உன்னதமான மாணவன் இருந்துள்ளான் என்பதனைத் தான் எங்களால் பார்க்க முடிகிறது. அவன் ஆத்மா சாந்தியடைய வேண்டும். மீண்டும் அவன் அதே பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, நீண்ட நாள் நன்றாக வாழ வேண்டும். அதுவே எமது ஆசை. விருப்பமும் கூட…
ஓம் சாந்தி சாந்தி….
தோழமையுடன், கண்ணன்