Posted in

முல்லரின் சவாலைத் தவிடுபொடியாக்கிய மெஸ்ஸி! முதல்முறையாகக் கோப்பையை வென்று சாதனை

வரலாறு திரும்பவில்லை! முல்லரை முறியடித்தார் மெஸ்ஸி!இன்டர் மியாமிக்கு முதல்முறையாக MLS கோப்பை! ரசிகர்கள் ஆரவாரம்!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி, MLS கோப்பையின் இறுதிப் போட்டியில் தாமஸ் முல்லரின் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தங்கள் வரலாற்றிலேயே முதல்முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது!

மெஸ்ஸியின் வருகைக்குப் பிறகு மிகப் பெரிய ஏற்றத்தைக் கண்ட இன்டர் மியாமி அணி, தனது ஏழு ஆண்டுகால வரலாற்றில் வெல்லப்பட்ட முதல் MLS கோப்பை இதுவாகும்.

முல்லரின் சவாலைத் தவிடுபொடியாக்கிய மெஸ்ஸி!

இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணிக்கும், ஜெர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் தலைமையிலான வான்கூவர் வைட்கேப்ஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த காலங்களில், 2014 உலகக் கோப்பை இறுதி மற்றும் 2010 காலிறுதிப் போட்டிகளில் முல்லர் தலைமையிலான ஜெர்மனி அணி மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தோற்கடித்து, மெஸ்ஸிக்குத் தொடர்ந்து சவால் கொடுத்து வந்தார். இம்முறையும் அதுபோலவே நடக்கும் என்று முல்லர் பேட்டியளித்திருந்த நிலையில், மெஸ்ஸி அவரது நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கி உள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், முல்லர் – மெஸ்ஸி இடையேயான வரலாற்றுப் போட்டிக்கு இந்த MLS இறுதிப் போட்டியில் மெஸ்ஸி ஒரு நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்! இந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல்களுக்கு உதவிகளை (Assists) அளித்து அசத்தினார்.

 “இது நான் காத்திருந்த தருணம்!” – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

கோப்பையை வென்றது குறித்து உற்சாகத்துடன் பேசிய மெஸ்ஸி, கடந்த காலங்களில் இன்டர் மியாமி சந்தித்த தோல்விகளை நினைவு கூர்ந்தார்:

“கடந்த ஆண்டு நாங்கள் லீக்கின் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டோம். இந்த ஆண்டு, MLS-ஐ வெல்வது எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இதற்காக, அணி மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டது. இது நான் காத்திருந்த தருணம். ஓர் அணியாக நாங்கள் காத்திருந்தோம். இது எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மெஸ்ஸி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி, மெஸ்ஸியின் தலைமையில் கால்பந்து உலகில் தனது ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது!