செங்கோட்டையன் போடுகின்ற சஸ்பென்ஸ் தான் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக மாறியுள்ளது. த.வெ.காவுக்கு நல்லதொரு சின்னம் கிடைத்து விட்டது என்றும். அது என்ன என்று கேள்விப் பட்டால் நாடே அதிரும் என்கிறார். ஆனால் அதனை தலைவர் விஜய் அவர்கள் தான் கூறுவார் என்று மேலும் சஸ்பென்ஸை கிளப்பியுள்ளார் செங்கோடையன்.
ஈரோடு:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் பணிகளை மேற்கு மண்டலத்தில் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன், இன்று மாலை ஈரோட்டில் மக்கள் மத்தியில் ஆவேச உரையாற்றி, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எடப்பாடிக்கு நேரடி சவால்!
நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்), “பெரிய கட்சி ஒன்று நம்மிடத்தில் வந்துவிட்டது… அங்கே கொடி அசைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் சுழி போட்டாச்சு!” என்று தவெகவை மறைமுகமாகச் சாடியிருந்தார்.
இதற்கு ஈரோட்டில் பதிலடி கொடுத்த செங்கோட்டையன், மிக ஆவேசமாகக் கருத்து தெரிவித்தார்:”இப்போது இங்கு பிள்ளையார் சுழி போடப்படவில்லை! வேறு ஒரு சுழி போடப்பட்டிருக்கிறது. எல்லோரின் முதுகிலும் ஏறிச் சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள். ஆனால், அதை மக்கள் சக்தி முறியடிக்கும். இந்த மண்ணின் மக்களின் சக்தி, விஜய்யைத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைக்கும்! மக்கள் சக்திக்கு யாரும் தடை போட முடியாது!”
குழந்தைகளும் விரும்பும் புதிய தலைமை
விஜய்க்கு ஆதரவாகப் பேசுபவர்கள் மத்தியில், செங்கோட்டையன் ஒரு புதிய அரசியல் கோணத்தை முன்வைத்தார். “ஒவ்வொரு கிராமத்திலும் விஜய்க்காகக் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஆண்ட கட்சிகளேதான் மீண்டும் ஆள வேண்டுமா? ஏன் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது? சிறந்த நல்லாட்சியை வழங்க வல்ல ஒரு புதிய தலைமைக்காக மக்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த முகம் கிடைத்துவிட்டது!”
“அந்தச் சின்னம் வந்தால் நாடே நடுங்கும்!” – ரகசியத் தகவல்
தவெகவின் மிக முக்கியமான அறிவிப்பு குறித்த பரபரப்பான தகவலையும் செங்கோட்டையன் வெளியிட்டார்.”மிக விரைவிலேயே தவெகவுக்குத் தேர்தல் சின்னம் கிடைக்கப் போகிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை இப்போதைக்கு வெளியில் சொல்லக்கூடாது. ஆனால், ஒன்றை மட்டும் சொல்கிறேன்… அந்தச் சின்னத்தைப் பார்த்த பிறகுதான் நாடே வியப்படையப் போகிறது; நடுநடுங்கப் போகிறது!”
அவர் மேலும் கூறுகையில், “ஏனென்றால், இந்தச் சின்னத்தை வெல்வதற்கு இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு இயக்கத்தாலும் முடியாது” என்று சூளுரைத்தார். தவெகவின் தேர்தல் சின்னம் குறித்த விண்ணப்பம் கடந்த மாதமே இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம்
செங்கோட்டையன் திட்டமிட்டிருந்த ஈரோட்டில், இன்று (டிசம்பர் 8) நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைக்காததால், மாற்று இடத்தை தேர்வு செய்து டிசம்பர் 16ஆம் தேதி அன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.